"எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டா தான்" - சீமான் பேச்சு


எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டா தான் - சீமான் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2021 6:36 AM GMT (Updated: 2021-03-27T12:06:13+05:30)

எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழ் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டம் அறவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிசா பர்வினை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய சீமான், எத்தனை முறை நட்டா (பாஜக தேசிய தலைவர்) வந்தாலும் நோட்டாவுக்கு கீழ் தான் ஓட்டு விழும். பாரதிய ஜனதா கட்சி மனிதகுல எதிரி. காங்கிரஸ் தமிழினத்தை அழித்தது. காங்கிரஸ் , பாஜக ஆகிய இரு கட்சிகளையும் ஏற்கமாட்டேன். இந்த இரு கட்சிகளையும் ஏற்கமாட்டேன் என்று முக ஸ்டாலின் கூறுவாரா? தமிழ் மண்ணில் தாமரை மலராது’ என்றார்.

இதற்கிடையில், அ.தி.மு.க. கூட்டணி சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, சவுகார்பேட்டையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசாரத்தில் ஜே.பி.நட்டா இந்தி மொழியிலேயே பேசினார். சவுகார்பேட்டை வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story