காலமும் சரியில்லை...களமும் சரியில்லை...தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை - லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்திரன்
தமிழக சட்டசபை தேர்தலில் லட்சிய திமுக எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், தேர்தலில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், அமைப்புகளும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றன. ஆனால், சில அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், சில அமைப்புகளும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காத நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்திரன் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டி.ராஜேந்திரன் கூறியதாவது,
மறைந்த முதல்வர் அம்மா (ஜெயலலிதா) இல்லாமல் அதிமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல் களம். அதேபோலவே மறைந்துவிட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் (கருணாநிதி) இல்லாமல் திமுக சந்திக்கக்கூடிய முதல் சட்டமன்ற தேர்தல் களம்.
இரண்டு கட்சிக்குமே அவரவருக்கு இருக்கிறது பலம். இது தவிர சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பக்கபலம். அது தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புதுச்சிகிச்சை.
ஒவ்வொருவருடைய வார்த்தையில் இருக்கக்கூடிய வாக்கு வன்மை வார்த்தையில் இருக்கும் தன்மை அதில் வெளிப்படும் உண்மை அதற்கென்று ஒரு சக்தி இருக்கிறது என்று முன்னாள் முதல்வர்கள் சிலர் நம்பினார்கள் அதன் அடிப்படையில் என்னை பிரசாரத்திற்கு அழைத்தார்கள் அது ஒரு காலகட்டம்... ஆனால், இன்றைக்கு கொள்கையை எடுத்துச்சொல்லி ஓட்டுக்கேட்டதல்லாம் அந்தக்காலம் ஆனால், கொடுக்கவேண்டியதை கொடுத்து ஓட்டு பெற்றுவிடலாம் என்று நினைப்பது இந்தக்காலம்.
காலமும் சரியில்லை, களமும் சரியில்லை அதனால் கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். பத்தும்பத்தாததற்கு இது கொரோனா காலம்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அணிய வேண்டும் முகமூடி அதேபோல பக்குவப்பட்டவனாக இருக்க வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி... இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய லட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை அரவணைக்கவும் இல்லை. நாங்கள் நடு நிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்’ என்றார்.
Related Tags :
Next Story