"என்னையும் பிரியாணி சாப்பிட அழையுங்கள்" - நடிகை நமீதா பிரசாரம்


என்னையும் பிரியாணி சாப்பிட அழையுங்கள் - நடிகை நமீதா பிரசாரம்
x
தினத்தந்தி 28 March 2021 9:49 AM GMT (Updated: 28 March 2021 9:49 AM GMT)

"என்னையும் பிரியாணி சாப்பிட அழையுங்கள்” என்று மதுரையில் நடந்த பாஜக பிரசார நிகழ்ச்சியில் நடிகை நமீதா தெரிவித்தார்.

மதுரை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்த சரவணன் கடந்த 14-ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த சரவணன் அதிமுக கூட்டணியில் மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நடிகை நமிதா பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தின்போது நடிகை நமீதா பேசுகையில், எனது சகோதரி, அக்கா, தங்கை, பாட்டி அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கும் 'மச்சான்ஸ்’ உங்களுக்கும் வணக்கம். வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்போகிறோம். மகிழ்ச்சியா?. 

அதன்பின் உங்களுக்கு எப்போது வேண்டுமோ அப்போது உங்களின் விருப்பமான பிரியாணி செய்து சாப்பிடுங்கள். என்னையும் பிரியாணி சாப்பிட அழையுங்கள். நானும் வருவேன். ஆனால், நான் சைவ பிரியர். சைவ பிரியாணி தான் சாப்பிடுவேன். இலவச கேபிள் இணைப்பு, இலவச வீடு, இலவச வாஷிங்மெஷின், 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் கொடுக்கப்படும். உங்களுக்கு எப்போது வேண்டுமோ அப்போது உங்கள் விருப்பமான சீரியல் (நாடக தொடர்) பாருங்கள்’ என்றார்.

Next Story