“ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழக உரிமையை மீட்பதற்கான தேர்தல் இது“ - மு.க.ஸ்டாலின்


“ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழக உரிமையை மீட்பதற்கான தேர்தல் இது“ - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 March 2021 6:25 PM IST (Updated: 28 March 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சேலம்,

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெற்று வரும் திமுக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் பாஜக அரசு நடத்தி வருகிறது. இதற்கு ஆளும் அதிமுக துணை செல்கிறது. இந்தி, சம்ஸ்கிருதம், மீத்தேன், நீட் திணிப்பு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் திணித்து வருகிறது. இதனை எதிர்க்க கூடிய சக்தி திமுகவிடம் தான் உள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்கான தேர்தல் இது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க தேர்தலில் திமுக வெற்றி பெறு வேண்டும்.

புதிய கல்விக்கொள்கையை பாஜக அரசு கொண்டு வந்து கல்வியை பாழாக்கியுள்ளார்கள். எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் இருப்பவன் நான். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை, அதனால் அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்ய ஈடுபட்டுள்ளார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த அனைத்து சம்பவங்களும் பாஜகவின் சதிகள் இருப்பது அவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை வைத்தே தெளிவாக தெரிகிறது.

ராகுல் காந்தி என்னை சகோதரர் என்றே அழைக்க சொல்வார்.,அவர் என் சகோதரர் தான் என்று கூறி தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போல் இந்திய அளவில் கூட்டணி அமைக்க ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியிடம் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story