10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி: புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை


10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி: புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 29 March 2021 3:21 AM IST (Updated: 29 March 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவை சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி வெளியிட்டார்.

அதை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி பல்லம்ராஜூ, மராட்டிய மந்திரி நிதின்ராவத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெறப்படும்.

* புதுவை அரசு மத்திய அரசிடம் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* புதுவையை 15-வது நிதிக்கமி‌‌ஷனில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மடிக்கணினி

* மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 60 ஜி.பி. டேட்டா ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.

* 10 மற்றும் 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த இலவச பஸ் பாஸ் மற்றும் வை-பை வசதிகள் செய்து தரப்படும்.

இலவச மின்சாரம்

* 150 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* அனைத்து சுகாதார மையங்களிலும் பகல் மற்றும் இரவு 10 மணிவரை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ வசதிகள் வழங்கப்படும். மாநில மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

* அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி எந்தவித கட்டணமுமின்றி இலவசமாக போடப்படும்.

மீனவர் ஓய்வூதியம்

* விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் மானியத்தொகை ஹெக்டருக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* இயற்கை சீற்றங்களின் காரணமாக மீன் பிடிப்பவர்கள் இறக்க நேர்ந்தால் அதற்காக இழப்பீட்டு தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். மீனவர் ஓய்வூதியம் 2 மடங்கு உயர்த்தப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000

* அனைவருடைய வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்படும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும்.

* தொழிற்கல்வி மற்றும் மருத்துவ கல்வி படித்த மாணவ, மாணவிகளுக்கு படிப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை முதல் 2 ஆண்டுகளுக்கு மிகாமல் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

* ஆண்டுதோறும் சுமார் 4 ஆயிரம் சுயஉதவி குழுக்களுக்கு குறைந்தது ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் வசதி செய்து தரப்படும். இதில் ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

* அனைத்து மகளிருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு வீடுகட்டும் மானியம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். மகளிருக்கு கறவை மாடுகள் வாங்க 50 சதவீதம் மானியம் நிதியாக வழங்கப்படும்.

ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்

* முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக படிப்படியாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் 50 சதவீத பயண கட்டணத்தில் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படும். தியாகிகள் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* மத்திய பா.ஜ.க. அரசால் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து ஆண்டு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும்.

இவை உள்பட பல திட்டங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. 

Next Story