அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள்: தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது திருமாவளவன் பேச்சு
அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார்கள். தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று திருமாவளவன் கூறினார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லாவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று கபிஸ்தலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தல் ஒரு வழக்கமான, சராசரியான தேர்தல் அல்ல. தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் இடையே நடக்கிற அதிகார போட்டிக்கான தேர்தலாக நாம் கண்கூடாக பார்க்கிறோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏதோ தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல. பா.ஜ.க.வை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பா.ஜ.க.வுக்கு எதிரான யுத்தம்தான் இந்த தேர்தல் யுத்தம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். எதிரணியில் போட்டியிடக்கூடிய 234 தொகுதிகளிலும் பா.ஜ.க.தான் நிற்கிறது.
பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட, அண்ணாவால் செழுமைப்படுத்தப்பட்ட, கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட இந்த தமிழர் பூமி, சாதி வெறியர்களிடம் சிக்கிவிடக்கூடாது. மதவெறியர்களின் இலக்குக்கு இரையாகிவிடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கும்பகோணத்தில்...
தொடர்ந்து கும்பகோணம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனை ஆதரித்து திருமாவளவன் பேசியதாவது:-
இன்று தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் இல்லை என்பதால் அ.தி.மு.க.வின் முதுகில் ஏறி சவாரி செய்து தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற எண்ணத்தில் பா.ஜனதா செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்களின் எண்ணம் நிறைவேறக்கூடாது. பா.ஜனதாவை தமிழகத்தில் இருந்து ஓட, ஓட விரட்ட வேண்டும் என்ற உறுதி மொழியை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் செயல்பட்டுக் கொண்டு உள்ளது.
தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. இருக்காது
தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது. அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜனதாவில் இணைந்து விடுவார்கள். தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வைத்துள்ள லெட்டர் பேடில் மோடியின் படம் பெரிய அளவில் இருப்பதே இதற்கு சாட்சி.
கூடவே இருந்து கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பதே பா.ஜனதாவின் வேலை. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்திற்கும் ஏற்படும். வடமாநிலங்களில் பா.ஜனதாவின் 10-க்கும் மேற்பட்ட தோழமைக் கட்சிகள் பலவற்றிற்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.
மறக்கக்கூடாது
கடைசியாக அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட என். ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை பா.ஜனதா விலைக்கு வாங்கியதை மறக்கக்கூடாது. இந்த சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கிடைத்த 6 இடம் முக்கியமல்ல. தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற கூடாது என்பதே எங்களது லட்சியம்.
ஸ்டாலின் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆவார். ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story