தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது டி.ராஜா பேட்டி


தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது டி.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 30 March 2021 4:26 AM IST (Updated: 30 March 2021 4:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்று கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.

கோவை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கோவை யில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எழுச்சி பெற்ற தி.மு.க. கூட்டணி

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களை இந்திய நாடே உற்று நோக்கி உள்ளது. தேர்தல் முடிவுகள் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும். தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி மக்களிடம் பெரும் எழுச்சியை பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. இந்திய ஜனநாயக கட்டமைப்பை தகர்த்து, மக்களை பிளவுபடுத்தி அதிகாரத்தை நிலைநிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தம்.

காலூன்ற முடியாது

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் மதம், மொழி, கலாசாரம் மற்றும் கடவுளின் பெயரால் வன்முறைகளை தூண்டி மக்களை பிளவுபடுத்துகிறது. அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளின் அரசாக பா.ஜனதா செயல்படுகிறது. தமிழகத்தில் ஒருபோதும் பா.ஜனதா காலூன்ற முடியாது. பா.ஜனதா அரசு இந்திய பொருளாதாரத்தை நிலை குலைத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.

மக்கள் விரும்பவில்லை

அடிப்படை மாநில நலன்களை, மக்கள் உரிமைகளை காப்பதில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை கண்டுள்ளது. பா.ஜனதா-அ.தி.மு.க கூட்டணியை மக்கள் நிராகரிக்க முடிவு செய்துவிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். தி.மு.க.வின் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story