‘‘234 தொகுதிகளிலும் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்’’ சென்னையில் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘‘234 தொகுதிகளிலும் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்’’ சென்னையில் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 12:12 AM GMT (Updated: 30 March 2021 12:12 AM GMT)

‘‘234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தப்பித்தவறி கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது’’, என்று சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆர்.நட்ராஜ் (மயிலாப்பூர்), பி.சத்தியநாராயணன் (தியாகராயநகர்), எஸ்.கோகுலஇந்திரா (அண்ணாநகர்), சைதை துரைசாமி (சைதாப்பேட்டை), விருகை வி.என்.ரவி (விருகம்பாக்கம்), அமைச்சர் பா.பென்ஜமின் (மதுரவாயல்), வி.அலெக்சாண்டர் (அம்பத்தூர்), பா.ஜ.க. வேட்பாளர் நடிகை குஷ்பு (ஆயிரம்விளக்கு), பா.ம.க. வேட்பாளர் எஸ்.எக்ஸ்.ராஜமன்னார் (பூந்தமல்லி) ஆகிய கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார்.

சென்னையில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:-

பெண்களை கீழ்த்தரமாக பேசுவதா?

கோவையில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெண்களை கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். இப்படி பெண்களை கொச்சைப்படுத்தி கீழ்த்தரமாக பேசுவோரை தட்டிக்கேட்கும் திராணி இல்லாத தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஆட்சியில் இல்லாதபோதே இப்படியென்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட தி.மு.க.வினருக்கும், அதன் தலைவருக்கும் தகுந்த பாடத்தை இந்த தேர்தலில் மக்கள் புகட்டவேண்டும்.

தி.மு.க ஆட்சி காலத்தில் மக்களுக்கு நிறைய திட்டங்களை செய்தது போலவும், இந்த தேர்தலில் அவர்கள் தான் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவது போலவும், ஆட்சி அமைப்பது போலவும் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 234 தொகுதியில் ஜெயிப்பதுபோல அவர்கள் கனவுதான் காணலாம். இந்த பகல் கனவு, நிஜம் ஆகாது. மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைவதை யாராலும் தடுக்கமுடியாது.

அராஜக கட்சி

சட்டசபையில் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, எதிர் கட்சித்தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை பிடித்தும், அவரது தலைமுடியைப் பிடித்தும் தி.மு.க.வினர் இழுத்தார்கள். அந்த காட்சி இன்னமும் என் மனதில் இருக்கின்றது. தி.மு.க ஒரு அராஜக கட்சி. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் சட்டமன்றத்தில் இப்படி அராஜகம் செய்தார்கள் என்றால் அவர்களிடம் நாட்டை எப்படி ஒப்படைக்க முடியும்? தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் அராஜகம், அடாவடிதான் செய்வார்கள்.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது, சட்டசபையில் எனது அரசின் பெரும்பான்மையை நிரூபித்தபிறகு மு.க.ஸ்டாலின் தனது சட்டையை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தார். இந்த தேர்தலில் தி.மு.க. தோற்பது உறுதி. அதற்கு பிறகு மு.க.ஸ்டாலின் எப்படி வரப்போகிறார்? என்பது தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் எவ்வளவு தில்லுமுல்லு செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது.

அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன்...

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு விலையில்லா 6 கியாஸ் சிலிண்டர்கள், விலையில்லா வாஷிங்மெஷின், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, வீடு தேடி ரேஷன் பொருட்கள், கட்டணமில்லா கேபிள் டி.வி. இணைப்பு, 18 வயது நிரம்பியவர்களுக்கு அரசு சார்பில் டிரைவிங் லைசென்ஸ், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளின் உதவித்தொகை உயர்வு, மாணவர்களின்கல்விக்கடன் தள்ளுபடி, புதிய ஆட்டோக்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம், வீடில்லா ஏழை மக்களுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் என நல்ல பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். இதையெல்லாம் மக்கள் யோசித்து தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு ஆதரவு தரவேண்டும். மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திட செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story