பறக்கும்படை சோதனையில் தமிழகத்தில் ரூ.350½ கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பொருட்கள் பறிமுதல்


பறக்கும்படை சோதனையில் தமிழகத்தில் ரூ.350½ கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2021 8:26 PM GMT (Updated: 2021-03-31T01:56:26+05:30)

பறக்கும்படை சோதனையில் தமிழகத்தில் ரூ.350½ கோடி ரொக்கம், தங்கம்-வெள்ளி பொருட்கள் பறிமுதல் தேர்தல் ஆணையம் தகவல்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினருடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று முன்தினம் (29-ந்தேதி) வரை நடந்த சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 350 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம்-வெள்ளி பொருட்கள் மற்றும் இதர உலோக பொருட்கள், வெளிநாட்டு பணம், சேலை, துணிமணிகள், மடிக்கணினி, குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்-வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.171 கோடியே 30 லட்சம் ஆகும். இதுதவிர ரூ.2 கோடியே 79 லட்சம் மதிப்பிலான 2 லட்சத்து ஆயிரத்து 138 லிட்டர் மதுபானங்களும் இந்த சோதனையின் போது பிடிபட்டன. ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறையினரும் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையில் மட்டும் ரூ.66 கோடியே 47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Next Story