அ.தி.மு.க. அறிவித்த இலவச சிலிண்டர் வரும்.., ஆனால் வராது.., கனிமொழி எம்.பி. கலகலப்பு பிரசாரம்


அ.தி.மு.க. அறிவித்த இலவச சிலிண்டர் வரும்.., ஆனால் வராது.., கனிமொழி எம்.பி. கலகலப்பு பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 10:09 PM GMT (Updated: 30 March 2021 10:09 PM GMT)

அ.தி.மு.க. அறிவித்துள்ள இலவச சிலிண்டர்கள் வரும்.., ஆனால் வராது.., என்று தேர்தல் பிரசாரத்தில் வடிவேல் பட பாணியில் கனிமொழி எம்.பி. கலகலப்பாக பேசினார்.

சென்னை, 

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி, மு.க.ஸ்டாலினின் ஆட்சி வர போகிறது. நான் தற்போது தமிழ்நாடு முழுவதும் சென்று பார்த்ததில், எங்கும் புதிதாக சாலை போடப்படவில்லை. 8 வழிச்சாலைக்கு மட்டும் பழனிசாமி முக்கியத்துவம் தருகிறார். ஏனென்றால் அதில் தான் டெண்டர் விட்டு கொள்ளையடிக்க முடியும்.

அடிக்கல் நாயகன் பழனிசாமி. அவர் திட்டங்களுக்கு அடிக்கல் மட்டும் நாட்டிக்கொண்டிருக்கிறாரே தவிர, எதையும் செய்து கொடுப்பதில்லை.

உரிமைகளை மீட்டெடுக்க...

அ.தி.மு.க. கடந்த தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் இலவச செல்போன், ‘செட்-டாப்' பாக்ஸ், ‘வை-பை' வசதி தருவோம் என்றார்கள், வந்ததா?. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார், வந்ததா?. இவர்கள் மக்களை ஏமாற்றி பதவி, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அடித்தட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்காதவர்கள்.

மொழி, நம்முடைய அடையாளத்தை காப்பாற்ற வேண்டும். டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் தவறாமல் ‘உதயசூரியன்' சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரும்.., ஆனால் வராது...,

கனிமொழி பேசிக்கொண்டிருந்த போது பெண் ஒருவர், ‘முதல்-அமைச்சர் அறிவித்த 6 இலவச சிலிண்டர்கள் கிடைக்குமா?' என்று கேட்டார். அதற்கு கனிமொழி, ‘ஸ்கூட்டி தருவோம் என்று சொன்னார்கள். உங்களுக்கு வந்ததா? அதுபோன்றுதான் இதுவும் (இலவச சிலிண்டர்கள்) வரும்..., ஆனால் வராது..., தி.மு.க. தான் ஆட்சிக்கு வரபோகிறது. அப்புறம் எப்படி இவர்களால் கொடுக்க முடியும். வடிவேலு பட பாணியில் கனிமொழி ‘வரும்.., ஆனா வராது..,' என்று பேசியது தேர்தல் பிரசாரத்தில் கலகலப்பூட்டியது.

Next Story