தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வருகிறாரோ, அந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வாக்குகள் குறையும் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வருகிறாரோ, அந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வாக்குகள் குறையும் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 6:15 AM IST (Updated: 31 March 2021 5:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வருகிறாரோ, அந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வாக்குகள் குறையும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

நாகர்கோவில், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி வாக்குமூலம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ‘இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை” என்று பேசியிருக்கிறார்.

நினைத்துப்பாருங்கள். அவர் முதல்-அமைச்சர். அந்த கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?. அவரே பிரசாரத்திற்கு வந்தபோது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

உறுதி அளித்தேன்

கடந்த முறை நான் தக்கலைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு புதிய பன்னாட்டு மாற்று முனையத்தை அமைக்கப்போகிறது. அதனால், மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நம்முடைய பேராயர்கள் வந்து என்னிடத்தில் முறையிட்டார்கள். ‘தி.மு.க. ஆட்சியில் நிச்சயமாக உறுதியாக அதற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம்’ என்று அப்போது உறுதி அளித்துவிட்டுச் சென்றேன்.

அதற்கு பிறகு குமரிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவ்வாறு எந்த சரக்கு பெட்டக முனையத்தையும் அமைக்க போவதில்லை. எனவே ஸ்டாலின் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வடிகட்டிய பொய்

நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் ஆதாரம் இருக்கிறது. நான் கருணாநிதியின் மகன். எதையும் புள்ளிவிவரத்தோடுதான் பேசுவேன். 20-2-2021 அன்றைக்கு பத்திரிகையில் அதிகாரபூர்வமான மத்திய அரசின் துறைமுகத்துறை விளம்பரத்தில் தெளிவாக இருக்கிறது. அதாவது மார்ச் 20-க்குள் யாராவது விண்ணப்பிக்க வேண்டி இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசின் மூலமாக விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. நான் உறுதியாகச் சொல்கிறேன், நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இதற்கு அனுமதி தர மாட்டோம். இது உறுதி.

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவிற்கு பா.ஜ.க.வுக்கு வாக்கு குறையப்போகிறது. அதுதான் நடக்கப்போகிறது. அவர் ஒவ்வொரு முறை வரும்போதும் தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கி கொடுத்துவிட்டதாக பேசிவிட்டுச் செல்கிறார். இதுதான் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சொல்வார்கள் அல்லவா, அப்படிப்பட்ட பொய்.

மீனவர்கள் பிரச்சினை

இன்றைக்கும் தொடர்ந்து மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது, இவ்வாறு அராஜகங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அரசோ, மோடியோ இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனைத் தட்டிக் கேட்கப் போவதுமில்லை.

எனவே, தமிழகத்தில் நம்முடைய கழக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பா.ஜ.க. நுழையவே முடியாது

இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய மானத்தை, மரியாதையை காப்பாற்றுகின்ற தேர்தல்.

பாஜக வரப்போவதில்லை. அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது. இது திராவிட மண். நம்முடைய தமிழை அழித்து ஒழிப்பதற்கு, சமஸ்கிருதத்தை - இந்தியைத் திணித்து, மதவெறியைத் திணிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது.

எனவே, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நம்முடைய வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story