மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல்
ஆண்டிப்பட்டி அருகே மாற்றுத்திறனாளி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் வேட்பாளராக மாற்றுத்திறனாளி கனிவேல் என்பவர் போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஆண்டிப்பட்டி அருகே ரோசனம்பட்டிக்கு வாக்குசேகரிக்க ஆட்டோவில் சென்றார்.
அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
இந்நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, வேட்பாளர் கனிராஜ், அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் பொதுச்செயலாளர் அருண்சுதாகர் தலைமையில், ஆதரவாளர்களான மாற்றுத்திறனாளிகள் சிலர் சக்கர நாற்காலியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு மதுரை சாலையில் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
வேட்பாளரை தாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் தங்களின் கோரிக்கை தொடர்பான மனு அளித்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story