பெண்களை பற்றி அவதூறாக பேசிவரும் 'தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தலில் சரியான பாடம் கற்பியுங்கள்' அமித்ஷா பேச்சு


பெண்களை பற்றி அவதூறாக பேசிவரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தலில் சரியான பாடம் கற்பியுங்கள் அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 4:07 AM IST (Updated: 2 April 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறாக பேசி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.

திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு திடலில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு, திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வீ.ஏ.டி.கலிவரதன், ரிஷிவந்தியம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்தோஷ், சங்கராபுரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ராஜா ஆகியோரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

மகத்தான வெற்றி

வருகிற 6-ந்தேதி பா.ஜ.க.வின் நிறுவன தினம். இந்த தினத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள்.

நமக்கெல்லாம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பற்றி தெரியும். லஞ்சம், லாவண்யம், ரவுடியிசம், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவற்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் எம்.ஜி.ஆர். வழியில், மோடியின் வழிகாட்டுதலின்பேரில் நல்ல பாதையில் தமிழகத்தை கொண்டு செல்லும்.

அவதூறு கருத்துகள்

சமீபத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளை தி.மு.க.வினர் பேசி வருகிறார்கள். ஏற்கனவே முந்தைய காலங்களில் கூட ஜெயலலிதாவை பற்றி இதுபோன்ற பல அவதூறு கருத்துகளை சொல்லியுள்ளனர்.

சரியான பாடம் கற்பிக்க வேண்டும்

நான் தமிழக மக்களிடம் கேட்க விரும்புவது என்னவெனில் பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின், ஊழலை பற்றி பேசுகிறார், அதற்கு முன்பு உங்களை அப்படியே திரும்பி பாருங்கள்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் என்னென்ன ஊழல் செய்தீர்கள் என்று திரும்பிப்பாருங்கள். தி.மு.க. என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு வியாபார நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

நான் இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்தில் தமிழக மக்களை காப்பாற்றியதில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழக மக்களை பற்றி கவலையில்லை. சோனியாகாந்திக்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமே கவலை.

வளர்ச்சி, நன்மை

லஞ்சம், ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. தமிழகத்திற்கு வளர்ச்சியையும், நன்மையையும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரிலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நமது கூட்டணியால் தான் செய்ய முடியும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதோடு பா.ஜ.க.வின் சங்கல்ப் யாத்திரையிலும் நீங்கள் இணைந்து வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

முன்னதாக புதுவையில் கொளுத்தும் வெயிலில் திறந்த வாகனத்தில் சென்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரி அமித்‌ஷா வாக்கு சேகரித்தார்.

இதேபோல கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சியை அ.தி.மு.க., பா.ஜ.க. தான் செய்துதர முடியும் என்று கூறினார்.

Next Story