அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தல் போன்று சட்டமன்ற தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டும்


அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தல் போன்று சட்டமன்ற தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2021 11:56 PM GMT (Updated: 1 April 2021 11:56 PM GMT)

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலை போன்று சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கொளத்தூரில் வீதி, வீதியாக பிரசாரம் செய்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் அவர், தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் களத்தில் நிற்கிறார். எனவே மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி, கொளத்தூர் தொகுதியில் முதற்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

விழாக்கோலம்

இந்தநிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் நேற்று 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். ஜி.கே.எம். காலனி பட்டுமேடு பகுதியில் மாலை 5.10 மணியளவில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், கொளத்தூர் அண்ணா சிலை அருகே இரவு 7.10 மணியளவில் நிறைவு செய்தார். அவர் 2 மணி நேரம் நின்றபடி திறந்த ஜூப்பில் தொகுதியை சுற்றி வந்து வாக்குசேகரித்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினரும், தொகுதி மக்களும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் குழந்தைகள், பெண்கள் ஆர்வத்துடன் கைகுலுக்கினர். பேருந்தில் சென்ற பயணிகளும் மு.க.ஸ்டாலினை பார்த்த மகிழ்ச்சியில் அவருக்கு கைகொடுத்தனர். பல இடங்களில் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.

கடும் சுற்றுப்பயணம்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:-

என்னுடைய தொகுதிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், உங்களுக்கு கோபம் வரும். எனவே நம்முடைய கொளத்தூர் தொகுதிக்கு வந்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துக் கொண்டிருக்கிறேன். நான் எங்கே இருக்கிறேன், எங்கே சாப்பிடுகிறேன், எங்கே தூங்குகிறேன், எங்கே பயணிக்கிறேன்? என்ற ஒரு குழப்பமான நிலையில்தான் பிரசாரத்தை நடத்திக்கொண்டிக்கிறேன். காரணம் கடும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறேன். நாளை (இன்று) விமானம் மூலம் திருச்சிக்கு சென்று பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறேன்.

கடைசி ஒரு மணி நேரம்

நடைபெற இருக்கிற தேர்தல் ஏதோ ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல. நான் முதல்-அமைச்சராக வேண்டும், தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.க்களாக வர வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் அல்ல.

நம்முடைய தன்மானம், சுயமரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பழனிசாமி ஆட்சியில் நம்முடைய சுயமரியாதையை இழந்திருக்கிறோம். நம்முடைய மாநில உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். எனவே இதனை எல்லாம் மீட்பதற்கு தான் இந்த தேர்தல்.

உங்கள் வீட்டு பிள்ளை

பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற போவது இல்லை. அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக் கூடாது. ஏனென்றால் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்க மாட்டார்கள். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக தான் இருப்பார்கள். எனவே அந்த மாதிரியான சூழல் வந்துவிட கூடாது. மதவெறி பிடித்த பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற தேர்லில் எப்படி பாடம் புகட்டினீர்களோ? அதே போன்று சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை அவர்களுக்கு (அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி) வழங்க வேண்டும்.

‘உதயசூரியன்’ சின்னத்துக்கு ஆதரவு அளித்து உங்கள் வீட்டு பிள்ளையை தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மயிலாப்பூரில் பிரசாரம்

தி.மு.க. வேட்பாளர்கள் த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), டாக்டர் எழிலன் (ஆயிரம் விளக்கு) ஆகியோரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூரில் நேற்றிரவு திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையத்தில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.


Next Story