எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்ய வாருங்கள்: பிரதமர் மோடிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அழைப்பு டுவிட்டர் பதிவுகளால் பரபரப்பு


எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்ய வாருங்கள்: பிரதமர் மோடிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் அழைப்பு டுவிட்டர் பதிவுகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 April 2021 10:41 PM GMT (Updated: 2 April 2021 10:41 PM GMT)

எங்கள் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்ய வாருங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் டுவிட்டர் மூலம் அழைப்பு விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, 

தமிழகத்தில் வரும் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்திற்கு தேசிய அளவிலான அரசியல் கட்சி தலைவர்களும் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திரமோடியும் ஏற்கனவே ஒருமுறை தாராபுரம் வந்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், நேற்று மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று அ.தி.மு.க. - பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பா.ஜ.க.வுக்கு வாக்குகள் குறையுமா?

இதற்கிடையே கடந்த மாதம் 30-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் நரேந்திரமோடி வருகிறாரோ, அந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வாக்குகள் குறையும்’’ என்று கூறினார்.

இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மதுரை வந்த பிரதமர் நரேந்திரமோடியை தி.மு.க. வேட்பாளர்கள் எல்லாம் டுவிட்டர் மூலமாக தங்கள் தொகுதிக்கு வந்து, அ.தி.மு.க. - பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

ஏற்கனவே கோவை தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக வந்து பிரசாரம் செய்யுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று, தி.மு.க. வேட்பாளர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), மதியழகன் (பர்கூர்) ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), இனிக்கோ இருதயராஜ் (திருச்சி), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை) உள்பட பலர் பிரதமர் நரேந்திரமோடிக்கு டுவிட்டர் மூலம் தங்கள் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

பிரசாரத்திற்கு அழைப்பது ஏன்?

அதாவது, பிரதமர் நரேந்திரமோடி தங்கள் தொகுதிக்கு பிரசாரம் செய்ய வந்தால், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோன்று, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் குறைந்து, தங்களுக்கு அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.

பொதுவாக, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் கட்சி தலைவர்களையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் பிரசாரத்திற்கு வருமாறு அழைப்பது வழக்கம். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள, அதுவும் பிரதமரையே பிரசாரத்திற்கு அழைப்பது அரசியலில் வேடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Next Story