முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பதில்


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பதில்
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மெரினாவில் அடக்கம் செய்ய முதலில் இடம் மறுத்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம், 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனவாசி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்?

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதல்-அமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது. ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்தார்.

அதேபோல மறைந்த முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜர் இறந்த பொழுது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய வலியுறுத்தினார்கள். அதற்கும் கருணாநிதி, கர்மவீரர் காமராஜர் தற்போது முதல்-அமைச்சராக இல்லை, ஆகவே, முன்னாள் முதல்-அமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என தெரிவித்தார். அந்த அடிப்படையில் தான் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் நான் தெரிவித்தேன்.

பொய்யான குற்றச்சாட்டு

மேலும் கருணாநிதியை அடக்கம் செய்ய, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே கொடுக்கப்பட்டது. ஆனால் அதை பெற மறுத்து மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்கப்பட்டது.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோர் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவை தான், நானும் பின்பற்றினேன். உண்மை இப்படி இருக்கையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரசாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story