எடப்பாடி பழனிசாமி ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பானது தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு


எடப்பாடி பழனிசாமி ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பானது தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2021 5:28 AM IST (Updated: 4 April 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

‘ஷூ’ அணிந்து வயலில் இறங்கிய மு.க.ஸ்டாலின் எங்கே, வயலில் நாற்று நட்ட எடப்பாடி பழனிசாமி எங்கே. எடப்பாடி பழனிசாமி ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பானது’ என்று தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சென்னை, 

அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்-அமைச்சராக வந்திருக்கின்றார். அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், விவசாயத்துக்கும் சம்பந்தம் இருக்கா?. விவசாயம் என்றால், என்னவென்று தெரியாதவர் தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கிறார். அவரை தான் முன்னிலை படுத்துகிறார்கள். ஆனால் நம்ம கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் ஒரு விவசாயி. விவசாயத்தின் கஷ்டங்களை புரிந்தவர். அவரால் தான் சிறப்பான விவசாய திட்டங்களை கொண்டு வரமுடியும்.

மு.க.ஸ்டாலின் ‘ஷூ' அணிந்துகொண்டு வயலில் இறங்கி நடக்கிறார். கால் வலிக்கக்கூடாதாம். 'ஷூ' உடன் போஸ் கொடுக்கும் மு.க.ஸ்டாலின் எங்கே, நாற்று நடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கே. 4 ஆண்டு காலம் தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். இன்னும் 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தை கொடுங்கள். ஏனென்றால் இந்த 4 ஆண்டு காலத்தில் நம்முடைய கோரிக்கைகளையும், மக்களுடைய கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி இருக்கிறார்.

மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்

காவிரி-டெல்டா படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சொல்லி நான்தான் யோசனை சொன்னேன். இன்றைக்கு அதை சட்டமாக்கியுள்ளார். வன்னியர்கள் போன்று இன்னும் பின்தங்கிய நிலையில் பல சமுதாயங்கள் இருக்கின்றார்கள். நம்முடைய நோக்கம் அனைத்து பின்தங்கிய சமுதாயங்களுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு பெற்றுத்தரவேண்டும். அதை உறுதியாக பெற்றுத்தருவோம். தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் பெண்கள் உள்பட மக்கள் அனைவரும் முடிவு செய்து விட்டார்கள்.

காரணம் தி.மு.க. வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. தி.மு.க.வினருக்கு பெண்களை மதிக்கத்தெரியாது. தி.மு.க.வினர் பெண்களை, தாய்மையை மதிப்பது கிடையாது. நடிகை நயன்தாராவை பற்றி தவறாக பேசியபோது, ராதாராவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலின், ஏன் ஒரு தாயைப்பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை இன்னும் விட்டு வைத்துள்ளார்? மு.க.ஸ்டாலினுக்கு பெண்களை மதிக்கத்தெரியாது. மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் பெண்களை மதிக்கத்தெரியாது.

பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி

அதனால்தான் சொல்கிறேன் தி.மு.க. வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி. தி.மு.க. என்றால் அராஜகம், அக்கிரமம். இப்போதே எல்லா வியாபாரிகளையும் மிரட்டி வருகிறார்கள். ஒருபோதும் தி.மு.க.வை விடக்கூடாது.

அதற்கு நம் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story