தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: ‘தனது மகனை முதல்-அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் துடிக்கிறார்’ அமித்ஷா பரபரப்பு பேச்சு


தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: ‘தனது மகனை முதல்-அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் துடிக்கிறார்’ அமித்ஷா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 4 April 2021 10:11 AM IST (Updated: 4 April 2021 10:11 AM IST)
t-max-icont-min-icon

‘‘தி.மு.க. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள், மு.க.ஸ்டாலின் தனது மகனை முதல்-அமைச்சராக்க துடிக்கிறார்’’ என்று நெல்லை பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பரபரப்பாக பேசினார்.

நெல்லை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று சென்னையில் பிரசாரம் செய்தார் பின்னர் நெல்லையில் தச்சநல்லூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தச்சை கணேசராஜா ஆகியோரை ஆதரித்து அமித்ஷா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடும்ப ஆட்சிக்கு முடிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். இந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் ஒரு அணியாகவும், பப்பு ராகுல் தலைமையில் ஒரு அணியாகவும் நிற்கிறோம். மோடி சாதாரண தேனீர் விற்றவர், ஏழை குடும்பத்தில் பிறந்தவர், இன்று உலகமே பாராட்டும் பிரமராக உள்ளார்.

இதேபோல் தமிழகத்தில் சாதாரண ஏழை விவசாயி மகனாக பிறந்து, தனது உழைப்பின் மூலம் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்துள்ளார். ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் குடும்ப ஆட்சியே நடத்தி வருகின்றனர். காங்கிரசில் 4 ‘ஜி'க்கள் உள்ளனர். அதாவது நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி தற்போது ராகுல்காந்தி என குடும்ப வாரிசுகளாக உள்ளனர்.

மகனை முதல்-அமைச்சராக்க துடிக்கிறார்

தமிழகத்தில் தி.மு.க.வில் 3 'ஜி'க்கள் உள்ளனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என குடும்ப வாரிசுகள் உள்ளனர். அடுத்தபடியாக மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்க துடிக்கிறார். இது குடும்ப கட்சியாகவும், பணக்கார கட்சியாகவும், செல்வந்தவர்கள் கட்சியாகவும் உள்ளது.

ஆனால், தற்போது மக்கள் ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தல் மக்கள் ஆட்சிக்கும்-குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் ஆகும். இதில் மக்கள் ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள். குடும்ப ஆட்சி நடத்த விரும்புவோரை புறக்கணிக்க வேண்டும். பிரதமர் மோடி விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், ஏழைகளை பற்றி கவலைப்படுகிறார். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தனது மகன் உதயநிதியை பற்றி மட்டுமே கவலை. எப்படியாவது தனது மகனை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கவலை மட்டுமே அவருக்கு உள்ளது.

அவதூறு பேச்சு

தமிழகத்தில் இறந்தவர்கள் குறித்து அவதூறு பேசுவது மரபல்ல. ஆனால் ஸ்டாலின் மரபுகளை மீறி மறைந்த பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் குறித்து அவதூறு பேசி வருகிறார். தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாய் குறித்தும் பேசி இருப்பது ஏற்புடையதல்ல. காமராஜர் குறித்தும் இழிவாக பேசியவர்கள்தான் தி.மு.க.வினர். பெண்களை அவதூறாக பேசும் தி.மு.க.வை பெண்கள் புறக்கணிக்க வேண்டும். தி.மு.க.வுக்கு பெண்கள், மாணவிகள், தாய்மார்கள் ஒரு ஓட்டுகூட போடக்கூடாது.

மோடி தமிழர்கள் மீது கொண்டுள்ள பற்றால், உலக அரங்கில் தமிழின் சிறப்பை பறைசாற்றி வருகிறார். தமிழக கடல் எல்லையில் மீனவர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். உலகில் எந்த சக்தியாலும் இந்தியா மீது தாக்குதல் நடத்த துணிவு ஏற்படவில்லை. ஏனென்றால் மோடி பிரதமராக இருப்பதே காரணம் ஆகும்.

மிகப்பெரிய வெற்றி

ஒட்டுமொத்த தமிழகத்தின் முழுமையான வளர்ச்சிக்கு அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்ட முடிவில் அமித்ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் செங்கோலும், தச்சை கணேசராஜா வீரவாளும் வழங்கினர். 

Next Story