தொடர்ந்து வெற்றி நடை போட மீண்டும் வாய்ப்பு தாருங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார நிறைவுரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 April 2021 7:40 PM IST (Updated: 4 April 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து வெற்றி நடை போட மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார நிறைவுரையில் தெரிவித்தார்.

சென்னை, 

தொடர்ந்து வெற்றி நடை போட மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார நிறைவுரையில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ஒரு விவசாயியாக ஒரு சாமானியனாக உங்களில் ஒருவனாக பேசுகிறேன். புரட்சி தலைவி அம்மாவின் மறைவு நம் எல்லோருக்கும் பேரிழப்பு, ஆனால் அம்மா இருந்த பதவியில் உங்கள் முதலமைச்சராக எனது கடைமைகளை அம்மா இருந்து முடிவெடுத்து செய்தால் எப்படி செய்வார்களோ அதே வழியில் செய்து வந்திருக்கிறேன்.

குடிமராமத்து, தடுப்பணைகள் நீர் வளத்தை பெருக்க எண்ணற்ற திட்டங்கள், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு, காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி முறைப்படுத்தும் குழு அமைத்தல், அத்திக்கடவு, அவிநாசி திட்டம், காவேரி,  குண்டாறு இணைப்பு திட்டம் துவக்கம் என்று பல நீர் மேலாண்மை திட்டங்கள் என இதனால் நாட்டிலேயே நீர் மேலாண்மையில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகள் வாக்குறுதி கொடுப்பாங்க ஆனால் நிறைவேற்றியுள்ளார்களா?. கடந்த 2006 பொதுத் தேர்தலின் போது 2 ஏக்கர் நிலம் கொடுப்பதா சொன்னாங்க செய்தார்களா?. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது சுய உதவிக் குழு நகைக் கடன் தள்ளுபடி என்றார்கள் செய்தார்களா? கலர் டி.வி தந்தார்கள், அதிலும் தங்களது குடும்பத்தினர் நடத்தும் கேபிள் டி.விக்கு கட்டணம் வசூலித்தார்கள்.

மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்தபோது மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் கட்சத் தீவை தாரைவார்த்தது யார்?. காவிரியின் உரிமையை 1974ம் ஆண்டு புதுப்பிக்காமல் விட்டது யார்?. 2007ல் காவிரி பிரச்சனையில் உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையை மைய அரசின் அரசிதழில் வெளியிடாமல் காலதாமதம் செய்தது யார்? அதனால் இரண்டாம் முறையாக காவேரி பிரச்சனையில் துரோகம் செய்தது யார்?

நீட் தேர்வுக்கு ஆதரவாக நின்றது யார்? மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது யார்?. தமிழ்நாட்டின் பாரம்பரிய ஜல்லிகட்டுக்கு தடைவிதிக்க உடந்தையாக இருந்தது யார்?. விவசாயிகள் ஏழைகள் நலன் காக்க நாங்கள் வேண்டுமா? அல்லது அவர்களை புறக்கணிப்பவர்கள் வேண்டுமா?

சிறுபான்மையினரின் நண்பர்களான நாங்கள் வேண்டுமா? அல்லது சிறுபான்மையினரின் காவலன் போல் வேஷம் போடுபவர்கள் வேண்டுமா?. மகளிர் நலன் காக்கும் நாங்கள் வேண்டுமா? அல்லது மகளிரை இழிவுபடுத்தும் அவர்கள் வேண்டுமா?. தமிழகம் தொடர்ந்து முதல் மாநிலமாக விளங்க, தொடர்ந்து வெற்றி நடை போட எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Next Story