வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை பெற 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்- தேர்தல் அதிகாரி


வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை பெற 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்- தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 5 April 2021 8:12 AM GMT (Updated: 5 April 2021 8:24 AM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.

சென்னை

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள்.

சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்: தமிழகம் முழுவதும் 88,900 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

சுமார் 4.17 லட்சம் பேர் நாளை தேர்தல் தொடர்புடைய பணியில் ஈடுபடுவர்,

உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படும். உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் மாலை 6மணிக்கு பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.தமிழகம் முழுவதும் சுமார் 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

கொரோனா நோயாளிகளும் மாலை 6 மணிக்கு பிறகு பிபிஇ உடையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படும். சுமார் 10,813 வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவெளியின்றி 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும். நேற்று பிற்பகல் 3 மணி வரை சுமார் 428 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சுமார் 530 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை 1950 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.

80+ வாக்காளர்களுக்கு ஊபர் நிறுவனத்தின் மூலம் இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Next Story