புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்: 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அங்குள்ள 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன.
இதையடுத்து 2 அணிகளை சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்கள், பிற கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரசாரம் நேற்று முன்தினம் இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.
இந்தநிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே ஆகிய பிராந்தியங்களில் 30 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 16 வேட்பாளர்கள் போட்டியிடும் உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் மட்டும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 31 ஆயிரத்து 383 பெண் வாக்காளர்களும், இதர பிரிவினர் 116 பேரும், புலம் பெயர்ந்த இந்தியர்கள் 357 பேரும், பணி வாக்காளர்கள் 310 பேர் என மொத்தம் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநிலத்தில் புதுச்சேரியில் 278, காரைக்கால் 30, மாகே 8, ஏனாமில் 14 உள்பட மொத்தம் 340 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராவுடன் பாதுகாப்புக் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
நேற்று காலை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
வாக்குச்சாவடிகளில் அவற்றை தேர்தல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.
அதன்பின் வாக்குச்சாவடிகளில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக்கில் உள்ள ‘ஸ்டிராங் ரூமிற்கு’ வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படும்.
அடுத்த (மே) மாதம் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதுவரை அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Related Tags :
Next Story