சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி - முத்தரசன் அறிக்கை


சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி - முத்தரசன் அறிக்கை
x
தினத்தந்தி 7 April 2021 11:53 PM IST (Updated: 7 April 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்து வரும் பா.ஜ.க.வும், அதன் அதிகார அரசியலுக்கு அடிபணிந்து விட்ட அ.தி.மு.க.வின் சுயநல கும்பலும் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் முற்போக்கு வளர்ச்சியினை சிதைத்துவிட்டன.

இந்த தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. இந்த கூட்டணிக்கு மக்கள் காட்டிய ஆதரவை தடுக்க பா.ஜ.க. தவறான பரப்புரையை மேற்கொண்டன. வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி இழிவுபடுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

இருந்தபோதிலும் கூட்டணி கட்சி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு சோர்வில்லாமல் பணியாற்றினர். இவர்களுக்கும், தேர்தலில் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநிலக்குழு இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story