சட்டசபை தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி- சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து


சட்டசபை தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு  பிரதமர் மோடி- சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள்  வாழ்த்து
x
தினத்தந்தி 2 May 2021 8:19 PM IST (Updated: 2 May 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி- சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.


திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.

திமுக மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.  திமுக மட்டும் 125 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.  சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின. 

தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். 

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது  டுவிட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். தேசத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய நலன்களை நிறைவேற்றுவதற்கும், கோவிட் - 19 தொற்றுநோயை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும், புகழ்பெற்ற தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என்றும் தமிழக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்கள் செயல்வீரர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ் இணைந்து  தமிழக மக்களின் கனவுகளை நினைவாக்க பாடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Next Story