கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டி இருந்ததால் வாக்குகள் எண்ணுவதற்கு, கூடுதல் நேரம் தேவைப்பட்டது - தேர்தல் அதிகாரிகள் தகவல்


கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டி இருந்ததால் வாக்குகள் எண்ணுவதற்கு, கூடுதல் நேரம் தேவைப்பட்டது - தேர்தல் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 3 May 2021 3:57 AM IST (Updated: 3 May 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தில் அரசு பிறப்பித்திருந்த கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டி இருந்ததால் வழக்கத்தைவிட வாக்குகள் எண்ணுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டன என்று தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் 6-ந்தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் எண்ணி நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தென்சென்னைக்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடந்தது.

இதனை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள், முகவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. முக கவசம், கையுறை, பிளாஸ்டிக்கால் ஆன முகத்தடுப்புகள் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த சோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையங்களுக்கு முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 33 ரவுண்டுகள், சைதாப்பேட்டை சட்டசபை தொகுதியில் 29 ரவுண்டுகள், மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் 29 ரவுண்டுகள், தியாகராயநகர் சட்டசபை தொகுதி 25 ரவுண்டுகள், விருகம்பாக்கம் 30 ரவுண்டுகள் எண்ணப்பட்டன. இந்த பணியில் 1,063 பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பாதுகாப்பு கருதி 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வாக்கு எண்ணும் பணியை 5 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பார்வையிட வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர். அவளுடைய அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன. அதில் விருகம்பாக்கம் சட்டசபைத் தொகுதியில் 1,338 வாக்குகளும், சைதாப்பேட்டை தொகுதியில் பதிவான 1,368, தியாகராய நகர் தொகுதியில் 1,883, மயிலாப்பூர் தொகுதியில் 1082, வேளச்சேரியில் 1,339 வாக்குகள் முதலில் எண்ணும் பணி நடந்தது.

தபால் ஓட்டுகள் எண்ணும்போது தி.மு.க. முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியானது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் தி.மு.க.வினர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். ஆனால் தபால் ஓட்டு வெற்றி வாய்ப்பு குறித்து அதிகாரிகள் உடனடியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளும் பின்பற்றப்பட்டன.ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே அரசு விதித்துள்ள கொரோனா நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் வழக்கத்தை விட வாக்கு எண்ணுவதற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதனால் சற்று காலதாமதமாகதான் வாக்கு எண்ணும் பணி நடந்தது என்று தேர்தல் அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story