கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன் பேட்டி


கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன் பேட்டி
x
தினத்தந்தி 3 May 2021 5:37 AM IST (Updated: 3 May 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்று சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் மந்திரி பினராயி விஜயன் பேட்டியில் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.  14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2ந்தேதி) நடைபெற்றது.

இதில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நெமம் தொகுதியை கூட பா.ஜ.க. இந்த தேர்தலில் இடது சாரியிடம் விட்டு கொடுத்து விட்டது.  தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முதல் மந்திரி பினராயி விஜயன் அளித்த பேட்டியில், கேரளாவில் பா.ஜ.க.வுக்கான இடமில்லை.  வகுப்புவாதம் அல்லது மதவேற்றுமையை கேரளா ஏற்று கொள்ளாது என கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ள நிலையில், பா.ஜ.க.வை தாக்கும் வகையில் முதல் மந்திரி விஜயன் கூறியுள்ளார்.


Next Story