கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா


கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் ராஜினாமா
x
தினத்தந்தி 3 May 2021 8:12 AM GMT (Updated: 3 May 2021 8:12 AM GMT)

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவியது. 

வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய போது, இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவினாலும், சில நிமிடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. தர்மாடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்மந்திரி பினராயி விஜயன் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதியில் 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. 

கேரளாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசும், இடதுசாரிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், முதன்முறையாக ஆட்சியை தக்க வைத்து இடதுசாரிகள் சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. 

இதனால் தொடர்ந்து 2-வது முறையாக முதல்மந்திரியாக பொறுப்பேற்க உள்ள பினராயி விஜயனுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுவிடம் அளித்துள்ளார். இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அமைச்சரவை குறித்த முக்கிய முடிவுகள் அதில் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story