ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்

ஈராக்கில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் இரண்டு ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பாக்தாத்,
ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்தது.
இதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் அறிவித்தது.
ஆனால், இதை மறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எங்கள் நாட்டு வீரர்கள் யாருக்கும் ஈரானின் தாக்குதலில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறினார். ஈரான் - அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் கூடி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஈராக்கில் பசுமை மண்டல பகுதி (Green zone) என்று அழைக்கப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியன அமைந்துள்ள அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, பயங்கர சத்தத்துடன் 2 முறை ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story