பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
பிரேசிலியா,
பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை அங்கு ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள புரோ கார்டியாகோ ஆஸ்பத்திரி உறுதி செய்தது. அந்த குழந்தையை அங்கு சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர். அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றது. 32 நாட்கள் கோமாவில் இருந்து வந்தது. செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இப்போது ஆஸ்பத்திரியில் சேர்த்து 54 நாட்கள் ஆன நிலையில் அந்த குழந்தை உயிர் பிழைத்தது. இது அங்கு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதுபற்றி குழந்தையின் தந்தையான ஆன்ட்ரேட் கூறும்போது, “எங்கள் குழந்தைக்கு கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை. உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது பரவியிருக்கலாம். அவன் சுவாசிக்க சிரமப்பட்டதை என் மனைவி கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்” என்று குறிப்பிட்டார். குழந்தையின் தாயார் விவியானே மான்டீரோ கூறுகையில், “ எங்கள் மகன் டாம் உயிர்பிழைத்தது நிச்சயம் அதிசயமான ஒன்றுதான். இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி வந்திருக்கிறது. 14-ந் தேதி எங்கள் மகன் பிறந்து 6 மாதம் ஆகிற நாள். அதை கொண்டாடுவோம்” என கூறினார்.
Related Tags :
Next Story