பாகிஸ்தான்; உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியில் 16% சதவீத மக்கள்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல்


பாகிஸ்தான்; உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியில் 16% சதவீத மக்கள்:  உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல்
x
தினத்தந்தி 22 Oct 2022 7:06 AM IST (Updated: 22 Oct 2022 7:20 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் 16 சதவீத மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியை சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.



லாகூர்,


பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூனில் இருந்து பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு நகரங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், விளைநிலங்கள், வீடுகள், கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

அந்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியானார்கள். கால்நடைகளும் பரவலாக உயிரிழந்தன. இதுதவிர, தோல் நோய், மலேரியா உள்ளிட்ட பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளானார்கள். இதற்கு பருவகால மாற்றம் ஒரு காரணம் என கூறப்பட்டது.

இந்த சூழலில், அடுத்த கட்ட நெருக்கடியை சந்திக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானில் 15 முதல் 16 சதவீத மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியை சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என அந்நாட்டின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.) துணை தலைவர் பரூக் தொய்ரோவ் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று, சமீபத்திய வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான அந்நாடு தெற்காசிய நாடுகளின் வரலாற்றில் உணவு நெருக்கடியால் மிக மோசமடைந்த நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

அவர் பேசும்போது, நாடு முழுவதும் 95 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி விட்டன. 45 லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதமடைந்து விட்டன என கூறியுள்ளார்.

சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் இணைந்து, ஒத்துழைப்புடன் செயல்பட்டு நாட்டின் வறுமை பாதிப்புக்கு உள்ளான நெருக்கடி சூழலை எதிர்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உலக உணவு திட்டத்திற்கான பாகிஸ்தான் இயக்குனர் கிறிஸ் கயே கூறும்போது, 82 நாடுகளை சேர்ந்த 34.5 கோடி மக்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர் கொண்டு உள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் 28.2 கோடியாக இருந்தது. கொரோனா பாதிப்புக்கு முன் இந்த எண்ணிக்கை 13.5 கோடியாக இருந்தது. வேளாண் உற்பத்தி திறனை அதிகரிப்பது என்பது, பாகிஸ்தானுக்கு அதிக தேவையான ஒன்றாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story