ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலில் இந்திய வம்சாவளிகள் 2 பேர் பலி


ஹமாஸ் தாக்குதல்: இஸ்ரேலில் இந்திய வம்சாவளிகள் 2 பேர் பலி
x

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் இஸ்ரேல் நிலைகுலைந்துபோனது.

அதை தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் மூண்டது. தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்த போரில் வெளிநாட்டினர் பலர் உயிரிழந்துள்ளனர். போர் தீவிரமடைந்து வருவதால் போர் முனையில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியா, 'ஆபரேசன் அஜய்' என்ற பெயரில் போர் முனையில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை பல்வேறு கட்டங்களாக மீட்டு வருகிறது.

இந்திய வம்சாவளிகள் 2 பேர் பலி

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

இஸ்ரேலின் அஷ்டோத் நகர பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதியான மோசஸ் (வயது 22) மற்றும் மத்திய மாவட்டத்தின் எல்லை காவல் அதிகாரியான கிம் டோக்ராக்கர் ஆகிய இரு இந்திய வம்சாவளிகளும் கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இறப்பை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் இருவரும் பணியில் இருந்தபோது கொல்லப்பட்டதாக கூறியுள்ளன.


Next Story