முதன்முதலாக சீன அதிபர் ஜின்பிங், ஹாங்காங் வந்தார்


முதன்முதலாக சீன அதிபர் ஜின்பிங், ஹாங்காங் வந்தார்
x
தினத்தந்தி 29 Jun 2017 11:30 PM GMT (Updated: 29 Jun 2017 7:44 PM GMT)

முதன்முதலாக சீன அதிபர் ஜின்பிங் ஹாங்காங் வந்தார். அவரது வருகைக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ஹாங்காங்,

முதன்முதலாக சீன அதிபர் ஜின்பிங் ஹாங்காங் வந்தார். அவரது வருகைக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இங்கிலாந்தின் காலனி பகுதியாக திகழ்ந்து வந்தது, ஹாங்காங். 1997–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் தேதி, ஹாங்காங்கை சீனாவசம் இங்கிலாந்து ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் ஹாங்காங் இருந்து வருகிறது. ‘ஒரே நாடு, இரட்டை நிர்வாகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஹாங்காங்குக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி உரிமையை சீனா தந்து, தனது ஆளுகையின் கீழ் வைத்துள்ளது.

ஹாங்காங்கை இங்கிலாந்து, சீனாவிடம் ஒப்படைத்ததின் 20–ம் ஆண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜின்பிங் முடிவு செய்தார்.

அதன் அடிப்படையில் நேற்று அவர் 3 நாள் பயணமாக தனது மனைவி பெங் லியுவானுடன் ஹாங்காங்கின் பிரதான சேக் லேப் கோக் விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்திறங்கினார். அவர் 2012–ம் ஆண்டு சீன அதிபராக பதவி ஏற்றபின்னர் ஹாங்காங் வந்திருப்பது இதுவே முதல்முறை.

அவர்களுக்கு விமான நிலையத்தில் பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும், கொடிகளை அசைத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பை தொடர்ந்து அங்கு கூடி இருந்தவர்கள் மத்தியில் ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசின் (சீன அரசின்) வலுவான ஆதரவை ஹாங்காங் பெற்று வந்திருக்கிறது. எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டிருங்கள். ஒரே நாடு, இரண்டு நிர்வாகம் என்ற நிலையில், தொடர்ந்து சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்வோம். ஹாங்காங்கை இங்கிலாந்து ஒப்படைத்த 20–வது ஆண்டு விழா என்பது சீனாவுக்கும், ஹாங்காங்குக்கும் மிகப்பிரமாண்டமான விழா.

ஹாங்காங் எப்போதும் என் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஹாங்காங்கின் அனைத்து பிரிவினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு பீஜிங் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹாங்காங்கின் சாலைகளில் சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சீனக் கொடிகளும், ஹாங்காங் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அதே நேரத்தில் ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள், ஜின்பிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர் தலைவர் ஜோசுவா வாங் தலைமையிலானவர்கள் ஜின்பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஜனநாயக ஆர்வலர்கள் பலரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் உள்ள கன்வென்சன் மற்றும் பொருட்காட்சி மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிற விழாவில் ஜின்பிங் தம்பதியர் கலந்துகொள்கின்றனர்.

இந்த விழா அரங்குக்கு வெளியே ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை (சனிக்கிழமை) ஹாங்காங்கை சீனா ஏற்றுக்கொண்டதற்கான விழாவையொட்டி, ஜின்பிங் கொடி ஏற்றுகிறார். அப்போது வருடாந்திர ஜனநாயக ஆதரவு பேரணி நடத்த எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது ஜின்பிங் எதிர்ப்பு பேரணியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள சீன ராணுவ தளத்துக்கு செல்லவும் ஜின்பிங் திட்டமிட்டிருக்கிறார்.

ஜின்பிங்கின் வருகையையொட்டி ஹாங்காங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story