பின்லாந்தில் தீவிரவாத தாக்குதல்: சந்தேகத்திற்குரிய முக்கிய குற்றவாளிக்கு காவல் தண்டனை

பின்லாந்தில் தீவிரவாத தாக்குதலில் 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தினால் காவலில் வைக்கப்பட்டான்.
ஹெல்சின்கி,
மொராக்கோ நாட்டை சேர்ந்த வாலிபர் அப்துர் ரஹ்மான் மெக்கா (வயது 18). கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் பின்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளான்.
இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை அந்நாட்டின் துர்கு என்ற துறைமுக நகரின் தென்மேற்கே அமைந்த மார்க்கெட் சதுக்கம் பகுதியில் பெண்களை குறிவைத்து ரஹ்மான் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளான்.
இது பின்லாந்து நாட்டின் முதல் தீவிரவாத தாக்குதல் சம்பவம் ஆகும்.
இந்த சம்பவத்தில் 2 பெண்கள் பலியாகினர். 6 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் அப்துர் ரஹ்மானை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
அப்துர் ரஹ்மான் தீவிரவாத நோக்கோடு செயல்பட்டுள்ளான் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ளான் என தேசிய புலனாய்வு துறை டுவிட்டரில் தெரிவித்தது.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நடந்த நீதிமன்ற விசாரணை பற்றிய தகவல் வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடியோ லிங்க் வழியே துர்கு நீதிமன்றத்தில் இன்று ரஹ்மான் ஆஜர் செய்யப்பட்டான்.
இதனை தொடர்ந்து ரஹ்மானை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தீவிரவாத தாக்குதலுக்காக ரஹ்மானுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கலாம் என அந்நாட்டின் புலனாய்வு அமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.






