ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: கத்திக்குத்து தாக்குதலில் இளம் பெண் பலி

ஆஸ்திரேலியாவில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் உள்ள சிட்டி சென்டர் பகுதியில் நேற்று காலை மக்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.
சிட்னி,
வாலிபர் ஒருவர் அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்து சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் முதுகில் குத்தினார். பின்னர் அவர் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்த முயன்றார். இதனால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓடினர்.
எனினும் ஆண்கள் சிலர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் வாலிபர் அவர்களின் கையில் சிக்காமல் அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தார்.
பின்னர் அவர்கள் சாதுரியமாக செயல்பட்டு நாற்காலி மூலமாக அந்த வாலிபரை தரையில் வீழ்த்தி, தப்ப முடியாதபடி அமுக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் வாலிபர் பிடிபட்ட இடத்தின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில், 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சாலையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபர் தான், அந்த பெண்ணை கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story