குங் புளு என்று குறிப்பிட்டார்:‘கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்’தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்


குங் புளு என்று குறிப்பிட்டார்:‘கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்’தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்
x
தினத்தந்தி 21 Jun 2020 11:45 PM GMT (Updated: 21 Jun 2020 8:44 PM GMT)

கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், நேற்று முன்தினம் ஓக்லஹோமா மாகாணத்தில் துல்சா நகரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசும்போது கொரோனா வைரஸ் பற்றி பேச தவறவில்லை.
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது என்பதற்காக அவர் சீனாவில் கைகளையும், கால்களையும் மட்டுமே பயன்படுத்தி சண்டையிடும் தற்காப்பு கலையான குங்புவை நினைவுபடுத்தும் வகையில், கொரோனா வைரசை குங்புளூ என்ற பெயரால் அழைத்தார். கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான் என அவர் குற்றம் சுமத்தினார்.

தொடர்ந்து அவர் பேசியபோது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று ஒரு நோய்தான். இதை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் வேறு எந்த நோயையும்விட பல்வேறு பெயர்களால் அழைக்க முடியும்.

நான் குங் புளூ என்று அழைப்பேன். அதன் 19 வெவ்வேறு பதிப்புகளையும், வெவ்வேறு பெயரிட்டு அழைப்பேன். பலர் இதை வைரஸ் என்று அழைக்கிறார்கள். அது வைரஸ்தான். எங்களிடம் 19 அல்லது 20 வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை கேட்கிறேன். ஏனென்றால், அதிகமாக பரிசோதனைகளை செய்வதால் இன்னும் கூடுதலாக நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். கொரோனா பரிசோதனை என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள்.

அதன் மோசமான பகுதி பரிசோதனைதான். நீங்கள் எந்தளவுக்கு பரிசோதனைகளை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு கூடுதலாக தொற்றுபாதித்தவர்களை கண்டறிய முடியும். எனவேதான் பரிசோதனைகளை குறைத்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு மேல் பரிசோதனை என்று செய்து கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று, சீனாவின் உகான் நகரில் தோன்றியது என்பதால் டிரம்ப் நிர்வாகம் உகான் வைரஸ் என்றும் கொரோனா வைரசை அழைக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா மீது தொடர்ந்து டிரம்ப் குற்றம்சுமத்தி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நோய் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் சீனா மறைத்து விட்டதாக அவர் கூறுகிறார்.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று இப்போது பரவி ஏறத்தாழ 88 லட்சம் மக்களை இந்த தொற்று பாதித்துள்ளது. இந்த தொற்று பாதிப்பால் சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும் பலனற்ற நிலையில் 4 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிற எந்த உலக நாடுகளையும் விட இந்த கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவைத்தான் அதிகளவில் பாதித்துள்ளது. அங்கு 22½ லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்து இருக்கிறது. இந்த தொற்றால் அங்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அங்கு பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கங்களால் அந்த நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதன்காரணமாக கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட தொடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் டிரம்பின் செல்வாக்கு அமெரிக்காவில் குறைந்து வருகிறது. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. எனவேதான் டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனாவுக்கு  தடுப்பூசியை கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story