நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு


நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு
x
தினத்தந்தி 14 Jan 2021 4:11 PM GMT (Updated: 14 Jan 2021 4:11 PM GMT)

சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு கொரோனா எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளது.

பீஜிங்

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. இதனிடையே உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சுக் குழு தங்கள் நாட்டுகுள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த மாதம் சீனா செல்ல திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த வாரம் சீன அரசு அனுமதி மறுத்தது.

இதனிடையே நீண்ட இழுபறிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றடைந்தது.

சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள 10 பேர் கொண்ட வல்லுநர் குழு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கள ஆய்வைத் தொடங்க உள்ளது. அதுவரை உலக சுகாதார நிறுவன குழுவினர், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக சீன மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.


Next Story