இங்கிலாந்தில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,22,186 பேருக்கு தொற்று...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Dec 2021 2:58 AM GMT (Updated: 25 Dec 2021 2:58 AM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,22,186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 1,22,186 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,91,292 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 99 லட்சத்து 61 ஆயிரத்து 369 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 17,82,066 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இங்கிலாந்தில் 12 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இங்கிலாந்தில் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் 45 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.  

இங்கிலாந்தில் கொரோனா அடுத்த அலையால் அன்றாடம் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு பூஸ்டர் தடுப்பூசி ஊக்குவிக்கப்படுகிறது. இது கிறிஸ்துமஸ் காலம் என்பதால், இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது.

இதனிடையே பைபிளில் உள்ள ஒரு வசனத்தை சுட்டிக்காட்டி தடுப்பூசியின் அவசியத்தைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்துரைத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “இயேசு கிறிஸ்து உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக எனக் கூறியிருக்கிறார். நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமக்கு மட்டுமல்ல மற்றவருக்கும் நன்மை பயக்கும் என்பதால் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவின் உபதேசத்தைப் பின்பற்ற தடுப்பூசி செலுத்திக் கொள்வதைவிட சிறந்த நடவடிக்கை இருக்க முடியாது” என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் விழாவைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்கவில்லை. கிறிஸ்துமசுக்குப் பின்னர் சில கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story