அருணாசல பிரதேசம் தங்களின் உள்ளார்ந்த பகுதி; சீனா சொல்கிறது


அருணாசல பிரதேசம் தங்களின் உள்ளார்ந்த பகுதி; சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 31 Dec 2021 10:17 AM GMT (Updated: 31 Dec 2021 10:42 AM GMT)

அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களுக்கு பெயர் சூட்டியதை நியாயப்படுத்தி சீனா கருத்து தெரிவித்துள்ளது.

பெய்ஜிங், 

அருணாசல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதை தொடர்ந்து எதிர்த்து வரும் மத்திய அரசு, அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு தரப்படுத்தப்பட்ட சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அந்தவகையில் அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 

சீனாவின் அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் மீதான விதிமுறைகளுக்கு இணங்க இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீன சிவில் விவகரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.  ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த 6 பகுதிகளுக்கு இவ்வாறு சீனா பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு  இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. எப்போதும் அப்படியே இருக்கும் எனவும் புதிதாக  உருவாக்கப்படும் பெயர்கள், இதில் எந்த மாற்றத்தையும் கொடுக்கப்போவது இல்லை எனக் கூறியது.

இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தில் 15 இடங்களுக்கு பெயர் சூட்டியதை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சீனா,  திபெத்தின் தெற்கு பகுதி தங்களின் உள்ளார்ந்த பகுதிகளில் எனத்தெரிவித்துள்ளது.

Next Story