“உக்ரைன் போர், என் பதவிக்காலத்தில் சோகமான தருணம்” - ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை


“உக்ரைன் போர், என் பதவிக்காலத்தில் சோகமான தருணம்” - ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை
x
தினத்தந்தி 24 Feb 2022 10:49 PM GMT (Updated: 24 Feb 2022 10:49 PM GMT)

உக்ரைன் போர், என் பதவிக்காலத்தில் சோகமான தருணம் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனைப்பட்டார்.

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி அவசர ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே, ரஷிய அதிபர் புதின் போர் நடவடிக்கையை அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், ஆத்திரமூட்டப்படாத நிலையில், நியாயமற்ற நடவடிக்கையாக உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதை கடுமையாக சாடினர்.

அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு பேசுகையில், ‘‘நாம் சமாதானத்தை கோரி இந்த கவுன்சிலில் கூடி இருக்கிற தருணத்தில், இந்த கவுன்சிலின் பொறுப்பை முற்றிலும் புறக்கணித்து விட்டு அதிபர் புதின் போர்ச்செய்தியை அளித்திருக்கிறார். இது மிக மிக கடுமையான நெருக்கடி. இந்த கவுன்சில் செயல்பட வேண்டும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறினார்.

இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வர்டு பேசும்போது, ‘‘நாம் இந்த அறையில் அமர்ந்து கொண்டு போர் முடிவில் இருந்து ரஷியா பின்வாங்க வேண்டும் என்று சொல்கிற தருணத்தில் அவர் தாக்குதலை அறிவித்துள்ளார். இது தூண்டப்படாத, நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை. இங்கிலாந்தும், பங்காளி நாடுகளும் ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இருக்கும் என்பதில் தீர்க்கமாக உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கான அமெரிக்காவின் அழைப்பை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். போரை நிறுத்தவும், ஐ.நா. சாசனத்தை நிலைநிறுத்தவும் இந்த கவுன்சில் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டார்.

பிரான்ஸ் தூதர் நிக்கோலஸ் டி ரிவியர் ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர், “இந்த கவுன்சில் கூடுகிற தருணத்தில் அறிவிக்கப்பட்ட போர் முடிவு, சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சபையையும், ரஷியா அவமதிப்பதை காட்டுகிறது. பாதுகாப்பு கவுன்சில் முன்பாக ரஷியா பொறுப்பேற்க வேண்டும்.’’ என்று குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு வெளியே வந்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இது மிகவும் சோகமான தருணம் என்பேன். நான் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் தொடக்கத்தில், ரஷிய அதிபர் புதினை நோக்கி, எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து கூறுகிறேன். உக்ரைன் மீதான படையெடுப்பில் இருந்து உங்கள் படைகளை நிறுத்துங்கள். ஏராளமானவர்கள் இறந்திருக்கிறார்கள். சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

ஆனால் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, டான்பாஸ்சில் ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கையை அதிபர் புதின் அறிவித்து விட்டார். உக்ரைன் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

எனவே தற்போதைய சூழலில் எனது வேண்டுகோளை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

அதிபர் புதின் அவர்களே, மனித நேயத்தின் அடிப்படையில் உங்கள் படைகளை மீண்டும் ரஷியாவுக்கு திரும்ப அழையுங்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மிக மோசமான போரை ஐரோப்பாவில் தொடங்க அனுமதிக்காதீர்கள். இந்தப் போரின் விளைவுகள் உக்ரைனை மட்டுமல்ல, ரஷிய கூட்டமைப்புக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தி விடும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து நாம் வெளியே வருகிற தருணத்தில், இந்தப் போரினால் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் முன்கூட்டி கணிக்க முடியாது. வளரும் நாடுகள் பலவும் மீண்டும் வருவதற்கு இடம் தரவேண்டும். இது மிக மிக கடினமானது. எண்ணெய் விலைகள் ஏற்றம், உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி நிறுத்தம், சர்வதேச சந்தைகளில் உறுதியற்ற தன்மையால் ஏற்படும் வட்டி விகிதங்கள் மாற்றம் ஆகியவை மிக கடினமானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story