மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்


மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது - அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
x
தினத்தந்தி 26 March 2022 5:16 AM GMT (Updated: 26 March 2022 5:16 AM GMT)

உக்ரேனிய நகரமான மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் "மனிதாபிமான நடவடிக்கையில்", துருக்கி மற்றும் கிரீஸுடன் இணைந்து பிரான்ஸ் செயல்பட்டு வருகிறது.

பிரஸ்ஸல்ஸ்,

ரஷியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரேனிய நகரமான மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் "மனிதாபிமான நடவடிக்கையில்", துருக்கி மற்றும் கிரீஸுடன் இணைந்து பிரான்ஸ் செயல்பட்டு வருகிறது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “மரியுபோலில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கையைத் தொடங்க, துருக்கி மற்றும் கிரீஸுடன் இணைந்து நாங்கள் பணியாற்றப் போகிறோம். இந்த நடவடிக்கையில் அதிகபட்ச பங்குதாரர்களை ஈடுபடுத்த முடியும். 

அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்துவேன். பிரெஞ்சு அதிகாரிகள் நேற்று மரியுபோல் மேயரிடம் பேசினர். அங்கு மீதமுள்ள 1,50,000 மக்கள் ஆபத்தான நிலைமையில் சிக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் கலந்துகொண்ட பின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதனை நேற்று தெரிவித்தார்.

மரியுபோல் நகரில் இதுவரை 2000த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம். கடந்த வாரம் அங்குள்ள திரையரங்கம் ஒன்றில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது ரஷிய படைகள் குண்டுவீசியதில் 300 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று முன்தினம் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) உச்சிமாநாடு மற்றும் ஏழு நாடுகள் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது, 

“உக்ரைன் போர் தீவிரமடைவதைத் தடுக்கும் வேலையை முடுக்கிவிட பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. 

நேட்டோ பயிற்சியில் 3,200 பிரெஞ்சு ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த போரில் பிரான்ஸ் "இணை-போராளி" ஆக மாறாது. 

ராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான ஆதரவுடன் நாங்கள் உக்ரைன் மக்களின் பக்கம் தொடர்ந்து நிற்கிறோம்.

இந்த போரை ஆரம்பித்ததன் மூலம் வரலாற்றில் மிகப்பெரிய பொறுப்பை ரஷியா ஏற்றுள்ளது. இந்தப் போரை எவ்வளவு விரைவாக நிறுத்த முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்வதே எங்கள் உத்தியாக இருக்கும்” என்றார்.

Next Story