பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி


பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
x
தினத்தந்தி 29 March 2022 10:27 PM GMT (Updated: 29 March 2022 10:27 PM GMT)

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் பேசுகையில், “இம்ரான் கானிடம் விடைபெறுவதற்காக இன்று நாம் இங்கு கூடியுள்ளோம், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, தனது சொந்த கட்சி மற்றும் தேசத்தின் உறுப்பினர்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டார்” என்றார்.

ஜமியத் உலமா-இ-இஸ்லாம் (எப்) கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில், “தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது மற்றும் திறமையற்றது. இந்த அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. இனி இந்த வழியில் நாட்டை ஆள வேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது” என கூறினார்.

Next Story