இலங்கையில் மந்திரிகள் கூண்டோடு விலகல்: ஆட்சியில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு


இலங்கையில் மந்திரிகள் கூண்டோடு விலகல்: ஆட்சியில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு
x
தினத்தந்தி 5 April 2022 12:23 AM GMT (Updated: 5 April 2022 12:23 AM GMT)

இலங்கையில் மக்கள் போராட்டம் மேலும் வலுத்து வரும் நிலையில், ராஜபக்சேவின் தம்பி பதவி பறிக்கப் பட்டதோடு, மந்திரிகள் பலர் கூண்டோடு விலகியுள்ளனர். அனைத்துக்கட்சிகள் இடம் பெறும் தேசிய அரசில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.

கொழும்பு,

இங்கிலாந்திடம் இருந்து 1948-ம் ஆண்டு விடுதலை பெற்றதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது.

நாட்கணக்கில் காத்திருப்பு

அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளதால் இலங்கை அரசால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை. உணவு, மருந்து பொருட்கள் என பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் இலங்கை அரசுக்கு இது பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாள்தோறும் பல மணி நேர மின்தடையை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் போன்ற எரிபொருட்களுக்காக விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்து கிடக்கின்றனர். 2 நாட்களுக்கு மேல் வரிசையில் நின்றால் மட்டுமே இவற்றை சிறிதளவேனும் பெறும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

விண்ணைமுட்டும் விலைவாசி

உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் கடைகள் மூடப்பட்டு உள்ளன. திறந்திருக்கும் கடைகளிலும் பொருட்களின் விலையை கேட்டால் மாரடைப்பு வந்து விடுகிறது.

ஒரு கிலோ அரிசி ரூ.220, கோதுமை ரூ.190, சர்க்கரை ரூ.240, பால் பவுடர் ரூ.1,900 முதல் ரூ.2 ஆயிரம் வரை என விண்ணைமுட்டும் விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன.

இந்த விலைக்கு பொருட்களை வாங்க முடியாததால் இலங்கை மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வாங்கும் வசதி படைத்தவர்களுக்கும் பொருட்கள் கிடைக்காததால் அத்தியாவசிய பொருட்களுக்கு அலையும் நிலைதான் உள்ளது.

அவசர நிலை பிரகடனம்

இலங்கை முழுவதும் இதே நிலை நீடித்து வருவதால் மக்களின் கோபம் ஆள்வோரை நோக்கி திரும்பி இருக்கிறது. இலங்கையின் ஆட்சியைதங்கள் கையில் வைத்திருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் போன்றவை முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதைப்போல நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இவற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுஉள்ளது. அத்துடன் 36 மணி நேர ஊரடங்கு கடந்த 2-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. மேலும் போராட்டங்களை ஊக்குவிப்பதை தடுக்க சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.

ஆனாலும் இந்த கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இந்த ஊரடங்கும், சமூக வலைத்தள முடக்கமும் நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா

இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். இதல் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் அடங்குவார்.

அவர்களது ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டார்.

பசில் ராஜபக்சே பதவி பறிப்பு

முன்னதாக தனது தம்பியும், நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சேவிடம் இருந்து அந்த பதவியை அவர் அதிரடியாக பறித்தும் கொண்டார்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இந்தியாவிடம் உதவி கோரி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பசில் ராஜபக்சே, அடுத்ததாக உலக வங்கி தலைவரையும் சந்தித்து உதவி கேட்பதற்காக செல்ல இருந்தார்.

ஆனால் இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக இவர் மீதுதான் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கூட்டணியின் கோபம் அனைத்தும் நிலை கொண்டிருந்தது.

எனவே அவரது பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, நீதித்துறை மந்திரியாக இருந்த அலி சப்ரியை நிதி மந்திரியாக கோத்தபய நியமித்து உள்ளார். அவரும் பதவியேற்றுக்கொண்டார்.

இவரை தவிர மேலும் 3 மந்திரிகள் புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். அந்தவகையில் வெளியுறவு மந்திரியாக ஜி.எல்.பெரீஸ், கல்வித்துறை மந்திரியாக தினேஷ் குணவர்தனே, நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக ஜான்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் புதிதாக பெற்றுக்கொண்டனர்.

ஆளும் கூட்டணியில் எதிர்ப்பு

அதேநேரம் பழைய மந்திரி களுக்கே மீண்டும் பொறுப்புகளை வழங்கியிருப்பதற்கு ஆளும் கூட்டணியில் உள்ள பிவிதுரு ஹெல உருமயா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘இது புதிய குப்பியில் இருக்கும் பழைய ஒயின்’ என அந்த கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சாடியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மீண்டும் கிடைக்க செய்யவும், நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் ஒரு அனைத்துக்கட்சி இடைக்கால அரசு தேவை என்பதுதான் எங்கள் கோரிக்கை என தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ள அவர், தங்களின் அடுத்த தலைவர்களை மக்களே முடிவு செய்யட்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்துக்கட்சிகளுக்கு அழைப்பு

இலங்கை அரசில் அங்கம் வகித்த மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில் நாட்டில் அனைத்துக்கட்சிகள் இடம்பெறும் தேசிய அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

எனவே நாட்டின் புதிய அரசில் இணையுமாறு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.

எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு

ஆனால் அதிபரின் இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து உள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யாதவரை எந்த அரசிலும் இணையப்போவதில்லை என சமாகி ஜன பலவேகயா கட்சி அறிவித்து உள்ளது.

இதைப்போல இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித பிரேமதாசாவும் அதிபரின் அழைப்பை நிராகரித்து உள்ளார்.

இலங்கை மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மத்திய வங்கி கவர்னர் அஜித் நிவார்ட் கப்ராலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பங்குச்சந்தையில் முக்கியமான பங்குகளின் குறியீடு 7.88 சதவீதம் சரிந்தது. அத்துடன் அனைத்து பங்கு குறியீடுகளும் 4.65 சதவீதம் வீழ்ந்தது.

இதனால் இலங்கை பங்குச்சந்தையின் வர்த்தகம் 2-வது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் வீடு முற்றுகை

இதற்கிடையே இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நேற்றும் நாடு முழுவதும் வீரியமாக அரங்கேறின. கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் நேற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராஜபக்சே உடனடியாக பதவி விலகக்கோரி கோஷமிட்ட அவர்கள், அங்கே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் கீழே தள்ளிவிட்டு ராஜபக்சேவின் வீட்டை நோக்கி முன்னேறினர்.

கண்ணீர் புகை வீச்சு

உடனே அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story