இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த தயார் - மகிந்த ராஜபக்சே அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 April 2022 6:07 AM GMT (Updated: 13 April 2022 6:07 AM GMT)

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கொழும்பு 

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது.

மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கிருந்துதமிழர்கள், தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே இலங்கைக்கு ரூ.45 ஆயிரம் கோடி வெளிநாட்டு கடன் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த கடனுக்கு தவணை செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக இலங்கை நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) நிதியுதவி கோரி இலங்கை அரசு அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அந்த நிதியுதவி கிடைக்கும் வரை, கடன் தவணை செலுத்துவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் கடுமையான மருந்துதட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வந்துள்ளது. மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதையடுத்து, அரசு டாக்டர்கள் சங்கம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஆஸ்பத்திரிகளுக்கு நன்கொடையாக வழங்குமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக ஒரு வலைத்தளத்தையும் தொடங்கி, இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்த சூழலில் ராஜபக்சே அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய தெருமுனை போராட்டம், நேற்று 4-வது நாளாக நீடித்தது. அதிபர் அலுவலகம் எதிரே நேற்றும் போராட்டம் நடந்தது. கனமழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்ந்தது.

‘‘நாங்கள் தேர்வு செய்த ஆட்சியாளர்கள் பதவி விலகும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்’’ என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார். சமூக வலைத்தளங்களிலும் கடுமையான எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. அமைதி காக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சே, டெலிவிஷன் மூலம் வேண்டுகோள் விடுத்தும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்நிலையில் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். முன்னதாக ராஜபக்சே சகோதரர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களில் இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story