மரியுபோல் நகரில் ரஷிய ராணுவத்திடம் சரணடைந்த 1,000 உக்ரைன் வீரர்கள் - அதிர்ச்சி தகவல்!


Image Source: ANI, Reuters, AP
x
Image Source: ANI, Reuters, AP
தினத்தந்தி 13 April 2022 8:43 AM GMT (Updated: 13 April 2022 8:43 AM GMT)

உக்ரேனியப் படைவீரர்கள் தானாக முன்வந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தனர் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக தன்வசமாக்கும் முயற்சியில் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளன. அதே வேளையில் கீவ், கார்கிவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களையும் ரஷிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று மரியுபோல் நகரத்தில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மரியுபோலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் சரணடைந்துள்ளனர். 36வது மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 1,026 உக்ரேனியப் படைவீரர்கள் தானாக முன்வந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிடப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் இப்போது ரஷிய வசமாகியுள்ளது.

கிழக்கு உக்ரைன் தாக்குதலின் ஒரு பகுதியாக, மரியுபோலைக் கைப்பற்றுவதை ரஷியா நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தென்கொரிய பாராளுமன்றத்தில் நேற்று காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி  தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story