வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதலை தொடங்கிய ரஷியா; பிரிட்டன் விடுத்த எச்சரிக்கை!


வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் தாக்குதலை தொடங்கிய ரஷியா; பிரிட்டன் விடுத்த எச்சரிக்கை!
x

ரஷியாவை சேர்ந்த இணைய வழி கும்பல் ஒன்று, சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

லண்டன்,

ரஷியாவை சேர்ந்த "சைபர் வீரர்கள்" எனப்படும் இணைய வழி கும்பல் ஒன்று, சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளனர் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக தவறான பிரச்சாரத்துடன் சமூக ஊடக தளங்களை குறிவைத்து அந்த சைபர் வீரர்கள் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

பிரிட்டன் தரப்பிலிருந்து நிதியளித்த ஆராய்ச்சியின் படி, ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஊதியம் கொடுத்து சிலரை இதற்காக பணிபுரிய செய்துவருகின்றனர். அவர்கள் டெலிகிராம் ஆப்-ஐ பயன்படுத்தி, ஆதரவாளர்களைச் சேர்க்கவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறார்கள். 

அவ்வாறு சேர்க்கப்பட்ட ஆதரவாளர்கள், அதன்பின்னர் ரஷியாவை கண்டனப்படுத்தும் விமர்சகர்களின் சமூக ஊடக கணக்குகளை தங்கள் கருத்துக்களால் நிரப்புகிறார்கள். ரஷிய ஆதரவாளர்கள், சமூக ஊடக கணக்குகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஆதரிக்கும் கருத்துக்கள் மற்றும் உக்ரைன் போரை ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர்.

உக்ரைன் படையெடுப்பை சட்டப்பூர்வமாக்க முற்படும், பெரிய அளவிலான தவறான பிரச்சாரத்துடன் சமூக ஊடக தளங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

மேற்கண்ட கும்பல், தாங்கள் சமூக ஊடக தளங்களில் கண்டறியப்படுவதைத் தவிர்க்க, புதிய நுட்பங்களை உருவாக்கியுள்ளது. டெலிகிராம், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட எட்டு சமூக ஊடக தளங்களில் அவர்களின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பார்வையாளர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, எவ்ஜெனி பிரிகோஜின் என்ற தனிநபர், ஆன்லைன் மூலமாக ரஷியாவுக்கு செல்வாக்கு பெறும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளாலும் தடை விதிக்கப்பட்டவர். அவருடன் மேற்கண்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் கூறியதாவது:-

“ரஷியாவின் நிழலாக செயல்படும் ‘சைபர் வீரர்கள்’,  எங்கள் ஆன்லைன் இடங்களை, புதினின் சட்டவிரோதப் போர் பற்றிய பொய்களை கொண்டு ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது.

பிரிட்டன் அரசாங்கம் இதுகுறித்து அதன் சர்வதேச கூட்டாளிகளை எச்சரித்துள்ளது. மேலும், நட்பு நாடுகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.

ரஷியாவின் இத்தகைய தகவல் செயல்பாடுகளை, குறைமதிப்பிற்கு உட்படுத்த, பிரிட்டன் தன் நட்பு நாடுகள் மற்றும் சமூகஊடக தளங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்” என்று  லிஸ் டிரஸ் கூறினார்.

Next Story