அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளி நபரான நந்த் முல்சந்தனி நியமனம்!


அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளி நபரான நந்த் முல்சந்தனி நியமனம்!
x
தினத்தந்தி 1 May 2022 4:05 PM GMT (Updated: 1 May 2022 4:05 PM GMT)

உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பாக கருதப்படுகிறது. அதன் தொழில்நுட்ப பிரிவின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளி நபர் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைமிகு விஷயமாகும்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்த் முல்சந்தனி நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான ‘சிஐஏ’ உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பாக கருதப்படுகிறது. அதன் தொழில்நுட்ப பிரிவின் தலைமை பொறுப்பில் இந்திய வம்சாவளி நபர் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைமிகு விஷயமாகும்.

முல்சந்தானி முன்னதாக கடந்த காலங்களில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொலைத்தொடர்பு துறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வரும் ‘சிலிக்கான் வேலி’ மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

மேலும், ஒப்லிக்ஸ், டிடெர்மினா, ஓபன்டிஎன்எஸ் மற்றும் ஸ்கேல்எக்ஸ்ட்ரீம் போன்ற பல வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

“25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த முல்சந்தனியை நியமிக்கப்பட்டதன் மூலம், சிஐஏ-வின் பணிகள் மற்றும் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான அதிநவீன கண்டுபிடிப்புகளை, இந்த அமைப்பு பயன்படுத்துவதை அவர் உறுதி செய்வார்” என்று சிஐஏ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சிஐஏ இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- “தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்துள்ளேன். புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவியானது, அந்த முயற்சியின் மிக முக்கியமான பகுதியாகும். நந்த் எங்கள் குழுவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

மேலும் இந்த முக்கியமான புதிய பாத்திரத்திற்கு அவரது விரிவான அனுபவத்தை கொண்டு வருவார்” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்த பொறுப்பில் சிஐஏ-இல் சேருவதில் நான் பெருமைப்படுகிறேன். சிஐஏ ஏஜென்சியின் நம்பமுடியாத தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் டொமைன் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அதன் வல்லுநர்கள் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்த உளவுத்துறையை வழங்கி வருகிறார்கள்...” என்று நந்த் முல்சந்தனி கூறியுள்ளார்.

Next Story