பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி...!


பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி...!
x
தினத்தந்தி 4 May 2022 4:12 PM GMT (Updated: 4 May 2022 4:12 PM GMT)

டென்மார்க் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார்.

பாரிஸ்,

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். முன்னதாக, நார்டிக் எனப்படும்  டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய 5 நாடுகளில் தலைவர்களை பிரதமர் மோடி டென்மார்க்கில் சந்தித்தார்.  

இந்த 5 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி கூட்டாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது உக்ரைன் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐரோப்பிய பயணத்தில் இறுதி நாளான இன்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவரை பிரான்ஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளார். சமீபத்தில் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றிபெற்று அதிபராக உள்ள இம்மானுவேல் மேக்ரானை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம், இந்தியா- பிரான்ஸ் உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியும், அதிபர் மேக்ரானும் ஆலோசிக்க உள்ளனர்.

Next Story