எங்கு இருக்கிறார் மகிந்த ராஜபக்சே? திடீர் என இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு


எங்கு இருக்கிறார் மகிந்த ராஜபக்சே? திடீர் என இருப்பிடத்தை மாற்றியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 May 2022 11:33 AM GMT (Updated: 2022-05-17T17:03:16+05:30)

திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

கொழும்பு

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.  போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 

அதனைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது.

தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் பிரதமர் என்ற வகையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் இதன் காரணமாக அவர் கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியேற விரும்பும் நேரத்தில் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சக  செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக  தெரியவருகிறது. முன்னாள் பிரதமர் தங்கி இருக்கும் அந்த பகுதியின் பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் பலப்படுத்தியுள்ளனர். 


Next Story