மனித பூனையாக மாற உடலில் 20 மாற்றங்களை செய்த பெண்..!


மனித பூனையாக மாற உடலில் 20 மாற்றங்களை செய்த பெண்..!
x

துளையிடப்பட்ட மூக்கு மற்றும் மேல் உதடு பிளவுபட்ட நாக்கு போன்றவை அவரது உடல் மாற்றங்களில் அடங்கும்.

நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் மக்களை எங்கும் நகர விடாமல் கட்டிப்போட்டிருக்கின்றன என்றே சொல்லலாம். அவர்களுக்கு தீனி போடும் வகையில் சமூக வலைதள பிரபலங்கள் தொடர்ந்து விதவிதமான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.

லைக்குகள் மற்றும் புகழுக்காக சமூக வலைதள பிரபலங்கள் சிலர் உயிரை பணயம் வைத்து பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் தங்கள் உடலை வருத்தி செய்யும் செயல்களை பெருமையுடன் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர். இதற்கு உதாரணமாக இத்தாலியைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சியாரா டெல்அபேட்டை குறிப்பிடலாம்.

22 வயது நிரம்பிய சியாரா டெல்அபேட், மனித பூனையாக மாறவேண்டும் என்பதற்காக தன் உடலில் 20 இடங்களில் மாற்றங்கள் செய்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களை உருவாக்கி டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்களை ஏராளமானோர் பார்த்துள்ளனர்.

உடலில் துளைகள் போடுவது, பச்சை குத்துவது என உடல் அமைப்பை மாற்றுவதற்கான அவரது ஆர்வம் 11 வயதில் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடலில் சுமார் 72 துளைகள் உள்ளன. துளையிடப்பட்ட மூக்கு மற்றும் மேல் உதடு பிளவுபட்ட நாக்கு போன்றவை அவரது உடல் மாற்றங்களில் அடங்கும்.

இவ்வளவு செய்தும் அவர் இன்னும் முழு பூனையாக மாறவில்லை. முழு பூனை போன்ற தோற்றத்தை அடைவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்கிறார் சியாரா. குறிப்பாக, பூனை போன்ற கண்களுக்கான பிரத்யேக அறுவை சிகிச்சை, பற்களில் மாற்றம், வால் போன்ற அமைப்பு இணைத்தல், தேவைப்படும் இடங்களில் பச்சை குத்துதல் என அவரது பட்டியல் நீள்கிறது.

இவ்வாறு செய்வதால் ஏற்படும் காயம் மற்றும் வலி தனக்கு பழகிவிட்டதாகவும், அது இனி பெரிய விஷயமில்லை என்றும் கூறுகிறார் சியாரா.


Next Story