பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்; மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை - பாக். கோர்ட்டு


பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்; மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை - பாக். கோர்ட்டு
x
தினத்தந்தி 25 Jun 2022 4:24 AM GMT (Updated: 25 Jun 2022 4:47 AM GMT)

மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லாகூர்,

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

மும்பை தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டுள்ளான். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சையதிற்கு பாகிஸ்தான் கோர்ட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதையடுத்து தற்போது லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இதனிடையே, மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சஜீத் மஜீத் மீர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் மஜீதை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மஜீத் தொடர்பான வழக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் மஜீத் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி மஜீத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மஜீத் சிறையில் அடைக்கப்பட்டான்.


Next Story