சூடானில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு...52 பேர் பலி


சூடானில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு...52 பேர் பலி
x
தினத்தந்தி 30 Jan 2024 11:09 AM IST (Updated: 30 Jan 2024 1:10 PM IST)
t-max-icont-min-icon

இந்த துப்பாக்கிச்சூட்டில் 64க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

கார்டூம்,

வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அபேய் உரிமை தொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஆப்பிரிக்க யூனியன் பரிந்துரைத்தது.

ஆனால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அபேய் தற்போது தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு சூடான் தன் படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இரு நாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இங்கு ஐ.நா. பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. எனினும், இங்கு இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர் கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.நா.வின் பாதுகாப்புப் படை வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் வெளியாகாத நிலையில், நிலப்பிரச்சினை இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story